ஜூன் மாத இறுதியில் மத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
இந்த அவசர சட்டத்திற்கு தடைகோரி தமிழ்நாட்டைச் சேர்ந்த பழமையான கூட்டுறவு வங்கிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றம், ”மத்திய அரசின் அவசர சட்டத்தால் உடனடி தாக்கம் ஏதும் இல்லாததால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. அதேபோல தற்போதைய நிலையில் கூட்டுறவு சங்கங்களின் உரிமைகளில் தலையிடுவதாக இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும். அதனால் மத்திய அரசின் அவரச சட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது” என்று தெரிவித்தது.
மேலும் கூட்டுறவு வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.