தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளன. 77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ”வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டு அறைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. கரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கும்போது தகுந்த இடைவெளி பின்பற்ற முடியாத நிலை ஏற்படும்.
வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும், மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும். கிருமிநாசினி வைக்க வேண்டும், முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிக்கக்கூடாது எனக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை .
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை வரும் திங்கள்கிழமை (ஏப்.26) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு - கருத்துக்கேட்பு கூட்டத்தால் பரபரப்பான ஆட்சியர் வளாகம்