சென்னை: தமிழ்நாடு அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று பிராட்வேயில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் அச்சமுதாயத்தினர், பாமகவினர் ஈடுபட்டனர். வரும் 4ஆம் தேதிவரை திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின் முதல் நாளான நேற்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாமக தொண்டர்கள் பேருந்து, வேன், கார்களில் சென்னையை நோக்கி வந்தனர்.
கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், சென்னையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால் போராட்டத்திற்கு வந்த பாமக தொண்டர்களை பெருங்களத்தூர், கானாத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட சென்னையின் எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, அவர்களைக் கைதுசெய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், மின்சார ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் பல்வேறு இடங்களில் பொது சொத்துகளைச் சேதப்படுத்தியும் ஆங்காங்கே சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகரில் 78 இடங்களில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக பாமகவினர் மூன்றாயிரம் பேரை காவல் துறையினர் கைதுசெய்து விடுவித்தனர்.
அதேபோல் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல் பெருங்களத்தூரில் ரயில் மீது கல்வீசி சேதப்படுத்தியதாக 350 பாமகவினர் மீது இந்திய ரயில்வே தண்டனைச் சட்டம் உள்பட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'வன்னியர் தனி இடஒதுக்கீடுப் போராட்டம் தேர்தலுக்காக நடத்தப்பட்டது இல்லை'- அன்புமணி ராமதாஸ்