சென்னை: அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் நியமிக்கப்பட்டவர்களை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பி.தர்மராஜ், எம்.கோவிந்தராசு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், "கடந்த 2014ஆம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 746 ஓட்டுநர்கள், 610 நடத்துநர்கள், 261 இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்கள், 13 இளநிலை பொறியாளர்கள், 40 உதவிப் பொறியாளர்கள் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பாணை வெளியிடப்பட்டபோது, உதவிப் பொறியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தேர்வு நடைமுறையில், பிஇ (B.E) படிப்பில் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற அசல் மதிப்பெண்கள் ஆகியவற்றை குறைத்து காண்பித்து, தங்களை தேர்வு செய்யவில்லை எனவும், அந்த தேர்வில் தங்களை விட குறைவாக மதிப்பெண் பெற்றவர்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக தேர்வு செய்து பணி நியமனம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் இதுதொடர்பாக சென்னையில் உள்ள வேலை வாய்ப்பு மோசடிக்கான காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் மேற்கூறிய பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களின் பணி நியமனத்தை செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும், இந்தப் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
நேர்முகத்தேர்வு தொடர்பாக போலீஸார் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும், தாங்கள் பெற்ற அசல் மதிப்பெண்களை கருத்தில் கொண்டு தங்களை இந்த பதவிகளுக்கு தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
மேலும், இதுபோன்ற நியமனங்களுக்காக இனி வரும் எல்லா தேர்வுகளிலும் பங்கேற்பவர்களின் பெயர், வயது, சாதி, மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கைகளை வைத்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் பி.முத்துக்குமார் ஆஜராகி, இந்த வழக்கை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என வாதிட்டார்.
மேலும் இது பணியாளர் சட்டம் மற்றும் நியமனம் தொடர்பான வழக்கு என்பதால், அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் நடந்த பணி நியமனங்கள் தொடர்பாக விசாரிக்கும் அமர்வில் தான் இந்த வழக்கை விசாரிக்க முடியும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.