கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன தலைவர் தனியரசு 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தனியரசு மீது அவரது சகோதரர் நல்லரசு கொலை முயற்சி புகாரை டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நல்லரசு, ”தனியரசுவின் மனைவி விஜயலட்சுமி பெயரில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள எங்களது பூர்வீக சொத்துக்களை தனியரசு அபகரித்துக்கொண்டு எங்களை மிரட்டுகிறார்” என்றார்.
மேலும், தனியரசு மீது அளித்த புகாரில், “ அடியாள்களை வைத்து எங்களை கொலை செய்துவிடுவேன் என 3 முறை தனியரசு மிரட்டினார். கடந்த ஆட்சியில் தனியரசு கூட்டணியில் இருந்ததால் அவர் மீது புகார் அளித்தும் காவல் துறையும், ஆட்சியாளர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கொங்கு இளைஞர் பேரவை என்னும் கட்சியை பயன்படுத்தி தனியரசு லாபம் அடைகிறார். அதிமுக கட்சியில் இருந்த உள்கட்சிப் பூசலை பயன்படுத்தியும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பயன்படுத்தியும் முறைகேடாக தனியரசு சொத்துக்களை சேர்த்துள்ளார். அது தொடர்பான ஆவணங்களை புகார் மனுவில் இணைத்துள்ளேஎன்” என குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, தற்போது தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள திமுக ஆட்சி நல்லாட்சியாக இருப்பதால் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் நல்லரசு தெரிவித்தார்.