சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் நேற்று (ஏப்ரல்.13) விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த பாண்டியன், எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர், இதுவரை மனுதார்கள் வழக்கு குறித்த ஆவணங்கள் கிடைக்கவில்லை. ஆவணங்கள் கிடைத்த பிறகு பதில் அளிக்கக் கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டனர்.
அப்போது நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரர்கள் வழங்க வேண்டும் எனவும், இந்த வழக்கை ஆண்டு கணக்கில் நிலுவையில் வைக்க முடியாது எனவும், அடுத்த விசாரணையின் போது பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி அன்றே வழக்கின் முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்து விசாரணை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: 'தோல்விகளில் இருந்து அதிமுகவை மீட்டெடுப்பதே எனது கடமை' - சசிகலா