நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் விவேக் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் மன்சூர் அலிகான், விவேக் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் கரோனா சோதனை குறித்தும், தடுப்பூசி குறித்தும், பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுகொண்டதால் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் கருத்துகளைத் தெரிவித்தார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. போதிய ஆதாரமின்றி அவதூறு பரப்பும் வகையில் நடிகர் மன்சூர் அலிகான் கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய நடிகர் மன்சூர் அலிகான் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ், நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் வடபழனி காவல் துறையினர் மன்சூர் அலிகான் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் உள்பட ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா இரண்டாம் அலை: மருத்துவர்களுடன் பிரதமர் ஆலோசனை!