சென்னை: புதுச்சேரி, ஏனாம் தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் பதவி வகித்தவருமான மல்லாடி கிருஷ்ணராவ், கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில், 12ஆம் வகுப்பு படித்ததாக போலியான தகவலை தெரிவித்துள்ளதாக, மங்கா வீரா பாபு என்பவர் ஏனாம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதேபோல முதியோர் இல்லம் நடத்துவதாகக் கூறி 1,600 சதுர மீட்டர் அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்த மல்லாடி கிருஷ்ண ராவ், அதை கல்வி அறக்கட்டளை ஒன்றுக்கு உள்வாடகைக்கு விட்டு, மூன்று ஆண்டுகளில் 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டியதாக, கொண்டமுரி ஸ்ரீ ஹரி குசும குமார் என்பவரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இரு புகார்கள் தொடர்பான வழக்குகளை ரத்து செய்ய கோரி என்.ஆர். காங்கிரசை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணராவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனு விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், குற்றச்சாட்டுகள் தொடர்புடைய 2 புகார்களும் பல ஆண்டு தாமதத்திற்கு பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தாமதத்துக்கான காரணங்களை தெரிவிக்கவில்லை என்று கூறி, மல்லாடி கிருஷ்ண ராவுக்கு எதிரான இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: முதல்வரை ஆபாசமாக பேசிய பாஜகவினர்: திமுகவினர் சாலை மறியல்!