சென்னை, துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ்.பி.செல்வம் நேற்று (மார்ச்.29) இரவு ஏழுகிணறு முத்து கிருஷ்ணன் தெருவில் உள்ள ஆர்எஸ்எஸ் நிர்வாகி கரண்ராஜ் என்பவரை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றதாகத் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த திமுகவினர் சிலர் வினோஜ்.பி. செல்வம் பணப்பட்டுவாடாவில் ஈடுபட வந்துள்ளதாகக் கூறி கதவினை மூடி சிறைபிடித்தனர். அதனைத் தொடர்ந்து, உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்தில் பாஜகவினர் குவிந்ததால் திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக அது மாறியது.
தொடர்ந்து, இதுகுறித்து ஏழு கிணறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், சிறைப் பிடித்து வைக்கப்பட்டிருந்த வினோஜ்.பி.செல்வத்தை மீட்டு விசாரித்தனர். விசாரணையில் தனது நண்பரின் வீடு என்பதால் உணவருந்த தான் வந்ததாகவும், அப்போது திமுகவினர் தன்னைத் தாக்கி கதவை மூடியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சிறைபிடித்து தன்னைத் தாக்கிய திமுகவினர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக வேட்பாளர் வினோஜ்.பி.செல்வம் ஏழு கிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதே போல் திமுகவினரும் பாஜக வேட்பாளர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி புகார் அளித்தனர்.
இரு தரப்பினரது புகாரையும் பெற்று கொண்ட காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.