சென்னை: விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி நிறுவனத்தின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி விவசாயி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
கடலூரை சேர்ந்த விவசாயி முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மேல்பாதி கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக சிறப்பு தாசில்தார் நிலம் கையப்படுத்தும் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு போடப்பட்ட நிலம் கையகப்படுத்தும் ஒப்பந்தம், கடந்த 16 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இழப்பீடு மற்றும் நிலம் கையப்படுத்துதல் சட்டம் 2013-ன் படி காலதாமதம் ஏற்பட்டதால் ஒப்பந்தம் தானாகவே காலாவதியாகி விட்டது. இந்நிலையில், எந்த அறிவிப்பும் இல்லாமல் ஜூன் 26ம் தேதி என்.எல்.சி நிறுவனத்திற்காக சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் விவசாய பயிர்கள் காட்டுமிராண்டித்தனமாக அழிக்கப்பட்டு உள்ளதால் விவசாயில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: நீங்கள் சமூக வலைதளங்களின் மூலம் வருமானம் ஈட்டுபவரா - வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டுமா?
சட்டப்பிரிவு 101 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் படி 5 ஆண்டுகளுக்குள் நிலத்தை கையப்படுத்தவில்லை என்றால், நிலம் அதன் உரிமையாளருக்கோ? அல்லது அவரது வாரிசுதாரர்களுக்கோ? நிலத்தின் உரிமை சென்று விடும் என கூறப்பட்டு உள்ளது. விதிகளின் படி என்.எல்.சி நிறுவனத்துக்கு உரிமை இல்லாத போதும், விவசாய பயிர்களை அழித்து நிலத்தில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
அதனால், என்.எல்.சி நிறுவனத்தின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நிலத்தை கையப்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். நிலத்தை மீட்டு விவசாயிகளுக்கே ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தர வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். இந்த மனு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: ஜோசியர் பேச்சைக் கேட்டு கருக்கலைப்பு செய்த பெண் பலி.. மெடிக்கல் உரிமையாளர் கைது; திருச்சியில் நடந்தது என்ன?