சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தைச்சேர்ந்த தொழிலதிபர் செந்தில்ராஜன் என்பவர், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமை அலுவலகத்திற்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன், இவரது மகன் செந்தில் ராஜன்.
ஜெகதீசனின் மூத்த சகோதரர் வைகுண்டராஜன். தாது மணல் கொள்ளை விவகாரத்தில் பிரபலமாகப் பேசப்பட்டவர், வைகுண்டராஜன். இந்நிலையில், செந்தில் ராஜன் தூத்துக்குடி மாவட்டத்தில் வி.வி மரைன் மற்றும் வி.வி. கோல்ட் ஸ்டோரேஜ் என்கிற இரண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இவரது பெரியப்பா வைகுண்டராஜனுக்கும், தனது தந்தை ஜெகதீசனுக்கும் இடையே 75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், இதனால் வைகுண்டராஜனின் ஆட்கள் அவ்வப்போது தான் நடத்தி வரும் இரண்டு நிறுவனங்களை தொடர்ந்து பிரச்னை கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் தான் நடத்திவரும் இரண்டு நிறுவனங்களுக்கும் ஆட்களை அனுப்பி தங்களை மிரட்டியதால், இது தொடர்பாக அப்போது தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் பட்டாணியிடம் தந்தை ஜெகதீசன் புகார் அளித்ததாகவும், ஆனால் காவல் ஆய்வாளர் வைகுண்டம், டி.எஸ்.பியான செந்தில்குமார் என்பவரைச்சென்று பார்க்கும்படி உத்தரவிட்டதாகப் புகாரில் தெரிவித்துள்ளார்.
பின்னர் டி.எஸ்.பியைச் சந்தித்தபோது, வைகுண்ட ராஜனிடம் பிரச்னை வைத்துக்கொள்ள வேண்டாம் என தனது தந்தை ஜெகதீசனை மிரட்டுவதாகவும், மேலும் 75 கோடி ரூபாய் பணத்தை வைகுண்ட ராஜனிடம் ஒப்படைத்துவிட்டு, அதற்கு கமிஷனாக ஏழரை கோடி ரூபாயிலிருந்து 10% தனக்கும் காவல் ஆய்வாளருக்கும் வழங்க வேண்டும் எனவும் கூறியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை நாடிய செந்தில் ராஜன்: காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், செந்தில் ராஜன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை நாடி, தனது இரண்டு தொழில் நிறுவனங்களிலும் நடைபெற்ற பிரச்னை தொடர்பாக உரிய வழக்குப்பதிவு செய்யாமல், தன்னிடம் போலீசார் பேரம் பேசுவதாக மனு ஒன்றைத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி இரண்டு சம்பவங்களிலும் வழக்குப்பதிவு செய்யக்கூறி உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரண்டு சம்பவங்கள் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டன. இது தொடர்பாக எந்தவித விசாரணையும் நடத்தப்படாத நிலையில், இதற்கிடையே செந்தில் ராஜன் நடத்தி வரும் நிறுவனத்தில் 50 ஆயிரம் ரூபாய் திருடு போன விவகாரம் தொடர்பாக, திருட்டு புகாரை அளிக்க ஏரல் காவல் நிலையத்திற்கு சென்ற பொழுது, அந்தப் புகாரை போலீசார் ஏற்க மறுத்து விட்டதாகவும் டி.எஸ்.பி சுரேஷ்குமார் மற்றும் ஆய்வாளர் பட்டாணி ஆகிய இருவரும் பேரம் பேசியதற்குத் தான் படிந்து போகாததால் தொடர்ந்து மிரட்டப்பட்டதாகும் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் தடுப்புச்சட்டத்தில் அளிக்கப்பட்ட புகார்: ஏற்கெனவே உயர் நீதிமன்ற அடிப்படையில் இரண்டு வழக்குகளிலும் உத்தரவு பெற்று எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் டிஎஸ்பியாக இருந்த சுரேஷ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் பட்டாணி ஆகிய இருவரும் தன்னிடம் லஞ்சம் கேட்டதற்கான ஆவணங்களுடன் புகார் அளித்துள்ளார்.
தற்பொழுது திருநெல்வேலி மாவட்டம், மத்திய குற்றப்பிரிவில் டிஎஸ்பியாக சுரேஷ் குமாரும், நசரேத் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பட்டாணியும் பணியாற்றி வரும் நிலையில், இவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்புகாரின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் துரை விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டு ஊழல் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் டிஎஸ்பி சுரேஷ் குமார் மற்றும் காவல் ஆய்வாளர் பட்டாணி ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.