சென்னை: வில்லிவாக்கம் மண்ணடி ஒத்தவாடை தெருவைச்சேர்ந்தவர், தீபன் ராஜ்(37). தீபாவளிப் பண்டிகையை ஒட்டி நேற்று தீபன் ராஜ் அவரது வீட்டின் முன்பு கல்லின் மீது பட்டாசு வைத்து வெடித்து வந்துள்ளார். அப்போது அதே தெருவை சேர்ந்த திமுக 95ஆவது வார்டு வட்டசெயலாளரான அகிலனின் காரை, அவரது கார் ஓட்டுநர் பாலாஜி ஓட்டி வந்ததாகத் தெரிகிறது.
அங்கு தெருவில் கல்வைத்து பட்டாசு வைத்திருந்த தீபன்ராஜிடம் ”ஏன் இப்படி கல் வைத்து இடையூறாக பட்டாசு வெடிக்கிறீர்கள்” என கேட்டதினால், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கார் ஓட்டுநர் பாலாஜி திமுக பிரமுகர் அகிலனுக்கு போன் செய்து, நடந்ததைப் பற்றி தெரிவித்ததால், உடனே அகிலன் சுமார் 10 நண்பர்களுடன் இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துச்சென்று தீபன் ராஜை சரமாரியாக தாக்கிவிட்டு, தப்பிச் சென்றுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த தீபன் ராஜை அவரது தந்தை தசரதன் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச்சம்பவம் தொடர்பாக தீபன் ராஜின் தந்தை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், காவல் துறையினர் தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர் அகிலனின் 17 வயது மகன், அகிலனின் தம்பி கடம்பன்(41) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் மீது தாக்குதல், ஆபாசமாகப் பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் திமுக பிரமுகர் அகிலன், பாலன், பாலாஜி, ரஞ்சித், சுதாகர், நவீன் உட்பட பலரை காவல் துறையினர் தீவிரமாகத்தேடி வருகின்றனர். ஏற்கெனவே திமுக பிரமுகர் அகிலன் மீது ஐ.சி.எப் காவல் நிலையத்தில் கொலை வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாலாஜாபாத் அருகே கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு;அடையாளம் தெரியாத நபர்களுக்கு வலை