சென்னை: மயிலாப்பூர் அண்ணாமலை தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (38). இவர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இணை ஆணையர் காவேரிக்கு கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
கார் ஓட்டுநர்
இவர் தினமும் பணி முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் பேசுவதற்காக கற்பகம்பாள் கல்யாண மண்டபத்திற்குச் செல்வது வழக்கம். நேற்று(மார்ச் 19) இரவும் பணி முடித்து விட்டு அந்த மண்டபத்திற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், வெகுநேரமாகியும் ஜெயச்சந்திரன் வீட்டிற்கு வராததால் அவரது மனைவி தமிழரசி கற்பகம்பாள் திருமண மண்டபத்திற்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்குள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைக்கண்ட அவரது மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, அங்குவந்த பொதுமக்கள் ஜெயச்சந்திரனின் உடலை கீழே இறக்கி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது ஜெயச்சந்திரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விசாரணை
இதைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலாப்பூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மதுப் பழக்கம் உடையவர் என்பது தெரியவந்துள்ளது.