சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்.18) கேள்வி நேரத்தில் பேசிய மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, சிறு வணிகர்களுக்கு வார தவணை முறையில் திருப்பி செலுத்தும் வகையில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வட்டியில்லா கடன் வழங்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், "கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 50,000 ரூபாய் வரை சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு சங்கம் மூலமாக வாராந்திர வசூல் செய்யப்பட்டு வருகிறது. வட்டி இல்லாத கடன் என்பது சாத்தியம் இல்லாத நிலை உள்ளது.
மக்களின் பங்களிப்பு மூலமாகத்தான் சங்கங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களின் வைப்புத் தொகையில் வட்டி இல்லாமல் கடன் கொடுக்க முடியாது. இது தொடர்பாக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து, அவர் அந்த சலுகையை ஏற்று அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்னர் விவசாய கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி என முதலமைச்சர் அறிவித்ததை செய்கின்ற துறைதான் கூட்டுறவுத்துறை, வட்டி இல்லாமல் கடன் கொடுப்பதற்கு சுயமாக முடிவு எடுக்க முடியாது" என்று கூறினார்.