சென்னை: மேற்கு வங்க மாநிலத்தை சோ்ந்தவா் சவ்விக் பெயின் (37). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மூன்று மாத சிகிச்சை முடிந்து நேற்றிரவு (நவம்பர் 5) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சவ்விக் பெயின் மேற்குவங்கம் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.
கொல்கத்தா செல்வதற்காக சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் சவ்விக் பெயின் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென சவ்விக் பெயின் மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து சென்று சவ்விக்கை பரிசோதித்தனர். இதில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை விமானநிலைய காவல்துறையினர் சவ்விக் பெயின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.