சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பைக் ரேஸ்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளன. நான்கு நாட்களில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி பைக் ரேஸில் ஈடுபட்ட 188 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோன்று, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 685 பேர் மீதும் கடந்த நான்கு நாட்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பைக் ரேஸில் ஈடுபட்டவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் காவல் துறையினர் போக்குவரத்துத் துறைக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.
கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டுபவர்கள், பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் என 286 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்துக் காவல் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
மேலும், சென்னையில் தொடர்ந்து பந்தயத்தில் ஈடுபடும் குழுக்கள் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாகவும், முற்றிலும் பைக் ரேஸை கட்டுப்படுத்த ஆலோசனைகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, 57 ஆயிரத்து 636 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப் போக்குவரத்துத் துறைக்குச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இதில் 37 ஆயிரத்து 338 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய அனுப்பப்பட்ட பரிந்துரை, பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.