கரோனா வைரஸ் பரவல் தடுப்பிற்காக 144 உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்குத் தேவைப்படும் முக்கிய உணவுப்பொருள்கள் தங்குதடையின்றி கிடைப்பதற்கு தமிழ்நாடு அரசு, போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்கின்ற வேளாண் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்கண்ட திட்டங்களைச் செயல்படுத்த அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், “ஒரு விழுக்காடு சந்தைக் கட்டணத்தை ஏப்ரல் 30ஆம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைப்பொருள்களை நியாயமான விலையில், பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட ஏதுவாக, தற்போது வியாபாரிகள் செலுத்தும் ஒரு விழுக்காடு சந்தைக் கட்டணத்தை எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை செலுத்திட வேண்டியதில்லை. விவசாயிகள் தங்கள் பண்ணை உற்பத்தியைச் சேமிப்புக் கிடங்குகளில் 30 நாள்கள் இலவசமாக வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்.
தற்போது நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பருத்தி, வெங்காயம், மிளகாய், புளி, முந்திரி, வெல்லம், மரவள்ளி மற்றும் சில மாவட்டங்களில் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விளைப்பொருள்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது, வியாபாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் ஒரு விழுக்காடு சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
தற்போது நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் நலனுக்காக அரசு அறிவித்துள்ள மேற்கண்ட வசதிகளை அனைத்து வேளாண் பெருமக்களும் வியாபாரிகளும் பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் எவ்வித தடையுமின்றி கிடைத்திட உதவிடுமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு ஏன் அதிக நிதி ஒதுக்கவில்லை? - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு