சென்னை: கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் காவலர் மற்றும் காவலர் குடும்பத்திற்கான மருத்துவ பரிசோதனை முகாமை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் கரோனா பரவல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஒரு சில இடங்களில் தொற்று அதிகரித்து வருவதால் ஒன்பது இடங்களை அடையாளம் கண்டு அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தடுப்பு நடவடிக்கைக்காக வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார் ரூமில் 30 சைபர் கிரைம் காவல் துறையினர் பணியில் இருப்பார்கள். இவர்கள் மென் நிறுவனம் உதவியுடன் கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள் என்பதை கவனிப்பார்கள்.
தொற்று ஏற்பட்டவர்களின் பட்டியலை வைத்து அவர்கள் தொற்று ஏற்படுவதற்கு முன்பு (15 நாட்கள்) எங்கெல்லாம் சென்றார்கள் என கண்டறிந்து, அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை தனிமைப்படுத்துவோம்.
போக்சோ வழக்குகள் தற்போது அதிகரித்து வருகிறது. இச்சூழலில் மகளிர் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். மேலும் ஒரு புகார் வந்தால் அதை எவ்வாறு விசாரிப்பது, வழக்குப்பதிவு செய்வது உள்ளிட்வை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக 16 மாநிலங்களில் கொள்ளை நடந்திருப்பதாக தகவல் வந்தள்ளது. அந்த 16 மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். வரக்கூடிய பதிலை பொறுத்து முடிவு எடுக்கப்படும்.
கரோனாவால் பலியான காவலரின் குடும்பத்தினருக்கு அரசு ஒதுக்கியுள்ள தொகை முறைப்படி சென்றடையும். தனியார் தொலைக்காட்சியில் உள்ள பொருட்களை சூறையாடிய நபரை கைது செய்து வழக்குபதிவு செய்துள்ளோம். அவர் மனதளவில் பாதிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரம் - 6 திருணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்