2020ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி ஆறாம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தனிநபர் தீர்மானம் கொண்டுவருவதற்கான எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மனுவை, அவர் சார்பாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேகர் பாபு, மா. சுப்பிரமணியன், சுதர்சனம், ஆர்.டி. சேகர், அரவிந்த் ரமேஷ் ஆகியோர் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை சந்தித்து வழங்கினர். சட்டப்பேரவை விதி 172இன் படி தனிநபர் தீர்மானம் கொண்டுவருவதற்கு அனுமதி கோரி இந்தக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரையின்போது எவ்வித குறுக்கீடுகளோ, விவாதமோ அனுமதிக்கப்படமாட்டாது. ஆளுநர் உரை முடிந்தவுடன், சபாநாயர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், உரை மீதான விவாதத்தை எத்தனை நாள்கள் நடத்தப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது. மேலும் கேரள அரசு தங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தனிநபர் தீர்மானம் கொண்டுவர அனுமதிகோரி எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க...சென்னையில் பட்டப்பகலில் வீட்டில் நுழைந்து செல்போன் திருட்டு