சென்னை மாவட்டம், மயிலாப்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை மேலாளரான வெங்கடரமணா கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் சிபிஐயிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜெயாவுதீன், ஷேக் முகைதீன் காதர் ஆகியோர் தேனாம்பேட்டையில் உள்ள மூன் மார்ஸ் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர். தொழிற்பெருக்கத்திற்காக ரூபாய் ஐந்து கோடி கடனாக வேண்டும் என தொழில் சம்பந்தமான ஆவணங்களை சமர்பித்ததால் அப்போதைய வங்கி மேலாளராக இருந்த ரொசாரியோ சில்வஸ்டர் ஷேன் என்பவர், இந்தக் கடனை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
பின்னர் ஆண்டு இறுதியில் வங்கியின் கணக்கு வழக்குகளை அலுவலர்கள் சரிபார்க்கும் போது மூன்மார்ஸ் நிறுவனம் கடனாக பெறப்பட்ட பணத்தை தொழிற்பெருக்கத்திற்காக பயன்படுத்தாமல், கடனையும் செலுத்தாமல், மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதே போன்று போலி ஆவணங்களை சமர்ப்பித்து தொழிற்பெருக்கத்திற்காக பல நிறுவனங்கள் பெயரில் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக அப்போதைய மேலாளராக இருந்த ரொசாரியோவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் ஏமாற்றிய நபர்கள், மேலாளர் ரொசாரியோ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வெங்கடரமணா தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில், நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் பெயரை வைத்து போலியான ஆவணத்தைக்காட்டி கடன் வாங்கியது தெரியவந்தது. மேலும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடிக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டது திருச்சியைச் சேர்ந்த சிராஜூதின் என்று குற்றம்சாட்டினர். இவரை நேற்று (செப் 16) விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியதையடுத்து சிராஜூதின் நேரில் விசாரணைக்கு ஆஜரானார். இதையடுத்து சிபிஐ அலுவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேசமயம் ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு சிராஜூதின் செல்போன் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடும் போது போலியான வங்கி விவரத்தைக்காட்டி 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை வாங்கி மோசடி செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.