இது குறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டம் வெளியிட்ட அறிக்கையில், பிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படுவதாக சில ஊடகங்களில் வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவதற்கான எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. கடுமையான போட்டியின் விளைவாக ஏற்பட்ட கட்டண சரிவின் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு நிதி நெருக்கடியைக் கடந்த சில மாதங்களாகச் சந்தித்து வருகிறது. இந்நிதி நெருக்கடியிலிருந்து, பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு திட்டத்தை மத்திய அரசு தயாரித்து, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அளித்துள்ளது.
இந்நிறுவனம், தீவிரவாதத்திற்கு உள்ளான பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் தொலைத் தொடர்பு சேவையை அளிப்பது மட்டுமல்லாமல், இந்திய ராணுவத்திற்கும் தொலைத்தொடர்பு சேவைகளை அளித்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் நம் நாட்டிற்கு அத்தியாவசியமான தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்குகிறது. வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது தொடர்ந்து தொலைத்தொடர்பு சேவைகளை பொது மக்களுக்கு அளிக்கும் ஒரே நிறுவனமாக பிஎஸ்என்எல் விளங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து மக்களுக்குச் சேவை அளித்து வரும். மிகச்சிறந்த தொலைத்தொடர்பு சேவைகளை வெளிப்படையான மற்றும் மிகக் குறைவான கட்டணங்களில் அளித்து வருகிறது. இது குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.