இந்திய மண்ணில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைக்கும் விதமாக எத்தனையோ விஷயங்களை மதவெறி பிடித்தவர்கள் பரப்பிவருகின்றனர். ஆனால், இஸ்லாமியர்கள் எம்மதங்களையும் வெறுப்பதில்லை. சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு அதிகம். சுதந்திரத்துக்கு பின்பும் இஸ்லாமிய சமுதாயத்தின் மீது வெறுப்புணர்வு தொடர்ந்து அரங்கேற்றப்பட்டுவருகிறது. வெறுப்புணர்வை மறந்து மக்கள் அனைவரும் ஒன்றிணைய காரணமாக இருப்பது பண்டிகைகள் தான்.
தீபாவளிக்கு மற்ற மத நண்பர்களை அழைத்துச் சென்று இந்து சமுதாயத்தினர் உணவளிப்பதும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கிறிஸ்துவர்கள் அதேபோன்று உணவளிப்பதும் வழக்கம். இதில் இஸ்லாமியர்கள் பண்டிகை கொஞ்சம் சிறப்பே! எத்தனை கடைகளில் பிரியாணி சாப்பிட்டாலும், இஸ்லாமிய நண்பர்கள் அளிக்கும் பிரியாணியே வேற லெவல்.
ரமலான் பண்டிகை நெருங்கினால் போதும், சமூக வலைதளங்கள் முழுக்க பிரியாணி வாசம்தான் மணக்கும். ‘மச்சான் எனக்கு பிரியாணி’, ‘மாப்ள எனக்கு பிரியாணி’ என இஸ்லாமிய நண்பர்களிடம் பிற மதத்தைச் சார்ந்தவர்கள் உரிமையோடு பிரியாணி கேட்கத் தொடங்கிவிடுவார்கள்.
இன்று சமூக வலைதளங்கள் முழுக்க அப்படித்தான் இருக்கிறது. இது வெறுப்புணர்வை விதைக்காமல் சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கான வழியாக பார்க்கப்படுகிறது. ரமலான் பண்டிகையான இன்று, அரசியல் தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் இஸ்லாமிய மக்களுக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
ஈடிவி பாரத் சார்பாக இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்! வாழ்க பிரியாணி! வளர்க சகோதரத்துவம்!