சென்னை : லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை 5:30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு மீண்டும் காலை 7:45 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்வது வழக்கம்.
இன்று (டிச. 1) அதிகாலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டனில் இருந்து 247 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விமானம் அவசர அவசரமாக மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அதன்பின்பு விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, பின்னர் மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு 5 மணி நேரம் தாமதமாக இன்று (டிச. 1) காலை 10:30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. பின்னர் அதே விமானம் மீண்டும் சென்னையில் இருந்து இன்று பகல் 12:45 மணிக்கு லண்டன் புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து லண்டன் செல்வதற்காக 229 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 5:30 மணிக்கு முன்னதாகவே வந்து காத்து இருந்தனர். அவர்களுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் காலை உணவு ஏற்பாடு செய்து கொடுத்தது. இருப்பினும் விமானம் 5 மணி நேரம் தாமதாக இயக்கபட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அடிக்கடி பழுதாகும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் : சென்னை - லண்டன் இடையே நேரடி விமான சேவை என்பதாலும், லண்டன் சென்று அங்கு இருந்து ஸ்காட்லாந்து, பிரேசில், ரோம், பாரீஸ், நியூயார்க், வாஷிங்டன், சிக்காகோ உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இணைப்பு விமானங்கள் இருப்பதாலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இந்த விமானத்தை அதிக அளவு பயண்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு முன் கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி சர்வர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் ஒரு வாரம் விமானம் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கு முன்னதாக ஜூலை மாதம் 10ஆம் தேதி சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
தற்போது நடுவானில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக 5 மணி நேரம் தாமதமாக சென்னை வந்து மீண்டும் லண்டன் சென்றுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதையும் படிங்க: புயலை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.. ஆட்சியர்களுக்கு அலர்ட் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!