ராஜிவ்காந்தி மருத்துவமனையின் தலைமை செவிலியர் உடல் நல்லடக்கம் - antique burial ground
சென்னை: ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் பிரிசிலாவின் உடல் பழவந்தாங்கல் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தலைமை செவிலியர் உடல் நல்லடக்கம்
சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராக பிரிசில்லா (58) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரது பணி 2020 மார்ச் மாதத்துடன் ஓய்வு பெற இருந்த நிலையில், அரசின் புதிய அறிவிப்பு காரணமாக மேலும் ஒரு வருடம் பணி நீட்டிப்பு பெற்றார்.
அதே மருத்துவமனையில் கடந்த 24ஆம் தேதி முதல் கரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (மே 26) இரவு 11 மணி அளவில் உயிரிழந்தார்.
ஆனால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தியோ, கரோனா சோதனையில், பிரிசில்லாவுக்கு பாதிப்பு இல்லை என்றுதான் முடிவு வந்துள்ளது. எனவே, கரோனா பாதிப்பால் அவர் உயிரிழக்கவில்லை. ஏற்கனவே செவிலியர் பிரிசில்லாவுக்கு நீரிழிவு நோய், சிறுநீரகம் செயலிழப்பு, இதய கோளாறு போன்ற நோய்கள் இருந்தன. அதனால்தான் அவர் உயிரிழந்தார் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது மருத்துவமனையில் வைத்து செவிலியர் பிரிசில்லாவின் உடலுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரின் உடலை உறவினர்கள் சென்னை பழவந்தாங்கல் தில்லை கங்கா நகரில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர்.
இதையும் படிங்க: ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் மரணம்