கரோனா தொற்றையடுத்து தேசிய ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிலையங்கள் முதல் தொழிற்சாலைகள் வரை அனைத்தும் மூடப்பட்டுள்ளன.அத்தியாவசியப் பொருள்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் மது கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் காந்தி நகர் கக்கன்ஜி தெருவை சேர்ந்த மனவழகன் என்பவர் தனக்கு மது வேண்டும் எனக் கூறி வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து மனவழகன் வீட்டார் பட்டாபிராம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மனவழகனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிக்க மது கிடைத்தால் தான் மேலே வருவதாக மனவழகன் கூறியுள்ளார். நிலமையின் தீவரத்தை உணர்ந்த காவல்துறையினர் அவரை மேல வரவழைக்க சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தீயாணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்து தீயணைப்புத்துறையினர் மது வாங்க பணம் தருகிறோம் சரக்கை நீ மேலே வந்து வாங்கிக்கொள் எனக்கூறி மனவழகனை மேலே அழைத்து வந்துள்ளனர்.
மேலே வந்த மனவழகன் மீண்டும் மது வேண்டும் என காவல்துறையினரிடம் அடம்பிடித்துள்ளார். இரவு 9.30 மணியளவில் தொடங்கிய இந்த கேலிக்கூத்து நள்ளிரவு வரை நீடித்துள்ளது.
குடிமகனின் இந்த போராட்டம் அப்பகுதி மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு கிடைத்ததுபோல் அனைவரிடையே சிரிப்பலைகள் எழுந்தன.