மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்து வாழ்த்துகள் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு சமூக நீதிக்கான மண் என்பதை இந்த வெற்றி நிரூப்பித்துள்ளது. இதை தமிழக வாழ்வுரிமை கட்சி மனதார வரவேற்கிறது என்றார்.
மேலும், பாஜகவின் பாசிச மதவாத நடவடிக்கை தமிழகத்தில் எடுபடாது என்பது, மக்களவைத் தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபணமாகியுள்ளதாகவும், திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களவையில் குரலாக ஒலிக்கும் என்றும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, பாமக வன்னியர்களுக்கும், வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு குடும்பத்துக்கும் செய்த துரோகம் போன்றவை இந்த தோல்விக்கு காரணம் என்றும் வேல்முருகன் குற்றம்சாட்டினார்.