இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆனை முகம், குழந்தை சிரிப்பு, எல்லோருக்கும் எல்லா காலத்திலும் இயன்றதை வைத்து வணங்க முடிந்த கடவுள் விநாயகர் அரச மரத்தடியில் கூட இவரை தரிசிக்கலாம்.
வானம் பார்த்த கடவுள் இவர், மஞ்சளிலும் பிடிக்கலாம், சாணியிலும் பிடிக்கலாம். சாலையின் ஓரத்தில் பூக்கும் எருக்கு மாலை சார்த்தலாம், அருகம்புல் போடலாம் இப்படி நியமம், கடுமையான விதிகள் என்று பக்தர்களை கஷ்டப்படுத்தாமல், அவர்களுக்கு என்ன இயலுமோ, எதில் தன்னை பார்க்க விரும்புகிறார்களோ, அதை அப்படியே ஏற்று அருள் பாலிக்கும் கடவுள் விநாயகர்.
இந்து மதத்தின் எந்த பிரிவினராக இருந்தாலும் இவரை தான் முதலில் வழிபட வேண்டும். இப்படி அனைத்திற்கும், அனைவருக்கும் எளிமையானவராக இருந்து, தடைகளை தகர்த்தெறியும் கடவுளாம் விநாயகருக்கு உரித்தான விநாயக சதுர்த்தி பண்டிகையை மிக விமரிசையாக கொண்டாட அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
விநாயகர் அருளால், தமிழ்நாடு மறுமலர்ச்சி பெற்று, தீய சக்திகள் ஒழிந்து, மக்கள் அனைவரும் நோய் நொடி இன்றி, கரோனா பிடியிலிருந்து விடுபட்டு, இனி வரும் காலங்களில் மகிழ்ச்சியும், மங்காத வளமும், குறையாத செல்வமும் பெற்று இனிதே வாழ எல்லாம் வல்ல விநாயகரை பிரார்த்தனை செய்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.