சென்னை: புகழ்பெற்ற நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (டிச.28) காலை உயிரிழந்தார். இந்நிலையில் இன்று காலை விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ஏழைகளுடைய பங்காளராக இருந்து, எப்படி வாழ வேண்டும் என அனைவருக்கும் வாழ்ந்து காட்டி விட்டு, அவருடைய ஆன்மா இன்று ஆண்டவனின் நிழலில் இளைப்பாற சென்றிருக்கிறது. இந்த துக்ககரமான நேரத்திலே, நம்முடைய கேப்டன் விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பதை நம்முடைய மனம் ஏற்க மறுக்கிறது.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தென்னிந்திய சினிமாவில் கோலோச்சி, அரசியலில் தமிழகத்தில் இரண்டு ஆளுமைகள் இருக்கும்போது, மக்கள் மூன்றாவதாக ஒரு தலைவருக்கு அன்பையும், அரவணைப்பையும் கொடுப்பார்கள் என்பதை நமக்கெல்லாம் காட்டி, அற்புதமான அரசியல் தலைவராக இருந்து தமிழகத்தில் ஒரு புதிய அரசியலுக்கு முயற்சி எடுத்து, நம்முடைய பிரதமர் நரேந்திர மோடியின் அன்பைப் பெற்றார்.
2014 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி இருந்தபோது, தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்து பிரதமர் உடன் நின்றவர், கேப்டன். அன்றைக்கு எங்கள் மாநிலத் தலைவர் பொன்னார், கேப்டன் உடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றினார். ஒரு அற்புதமான பிரதமர் வரும்போது, நானும் இருக்கின்றேன் என்று உணர்ச்சி ததும்ப 2014 தேர்தலிலே பாரதப் பிரதமருக்காக கடுமையாக உழைத்தவர், நமது கேப்டன்.
இன்று இந்த மீளாத் துயரில் இருக்கக் கூடிய வேளையிலே நம்முடைய பிரதமர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இங்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்பேரில் நிர்மலா சீதாராமன் இங்கே வந்து கேப்டனின் குடும்பத்தினரை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடியின் சார்பாக தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தி உள்ளார். நாங்கள் உங்களோடு இருக்கின்றோம், கேப்டன் உடன் இருக்கின்றோம். கேப்டன் எங்கிருந்தாலும் அவருடைய ஆன்மா தொடர்ந்து தமிழக அரசியலை வழிநடத்தும் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
தொண்டர்கள் மற்றும் பிரேமலதா விஜயகாந்துக்கு எங்களது ஆறுதலைத் தெரிவிப்பது மட்டுமல்லாமல், அவர் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவார் என்கின்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது. கேப்டன் உடைய இரண்டு மகன்களுக்கும், சுதீஷ், கட்சியின் நிர்வாகிகளுக்கும், பாஜகவின் சார்பாக எங்களின் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கேப்டனின் புகழ் என்றும் ஓங்கி இருக்கும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மறைந்த விஜயகாந்த் உடலிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி!