திருவள்ளூர்: திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா பொறுப்பாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் ஜி, மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் 9 மாவட்ட சக்தி கேந்திரா உறுப்பினர்கள் என மொத்தம் 1,339 பேர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதேபோல் வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அண்ணாமலை, “உக்ரைன், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் எரிபொருட்கள் விலை அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் எரிபொருள் 99.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலினின் முதன்மை உடன்பிறப்பாக கமல்ஹாசன் இருக்க வேண்டும் என விரும்புகிறார். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்தது அவரின் தாத்தாவின் டெக்னிக். பிரதமர் மோடிக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி கிடையாது. பிரதமர் மோடியிடம் யார் அனுமதி கேட்டாலும், அவர் அனுமதி கொடுப்பார்.
தமிழ்நாட்டில் இன்னும் ஆறு மாதத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி இல்லை என திமுகவின் அறிவிப்பு வரும். விடுதலை சிறுத்தைக்கும் தடா பெரியசாமிக்கும் யுத்தம் நடக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, துணை முதலமைச்சராக ஆசை இருக்கிறது. திமுகவில் இருந்து வெளியேற விடுதலை சிறுத்தைகள் கட்சி விருப்பப்படுகிறது. ஆகையால் திமுகவில் இருந்து வெளியேற பாஜகவை பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “பாஜக, பாமக ஆகிய கட்சிகளில் அங்கம் வகிக்கும் கூட்டணியில் விசிக இடம் பெறாது'' எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுகவுக்கு திருமாவளவன் எச்சரிக்கை விடுக்கிறாரா?