சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யும் மத்திய அரசு: அப்போது பேசிய அவர், "நான்கு நாள்கள் இலங்கை தீவுக்கு பயணம் மேற்கொண்டேன். மே 1ஆம் தேதி நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்றேன். இலங்கையில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு மத்திய அரசு சார்பில் 4 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்பட்டன. இன்னும் 10 ஆயிரம் வீடுகள் கூடுதலாக வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தற்போது மத்திய அரசால் கட்டித்தரப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதன் காரணமாக 1.5 பில்லியன் இந்தியா அரசு இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அரிசி, காய்கறி மற்றும் மருத்துவம், பெட்ரோலியம் உள்ளிட்டவை இந்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இலங்கையில் தமிழ் சார்ந்த கட்சித் தலைவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம்: தருமபுரம் ஆதினம் பட்டின பிரவேசம் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஏன் அரசு திடீரென தடை விதிக்க வேண்டும். சட்டமன்றத்தில் பாஜக சார்பில் இதனை தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். அரசு இதனை பரிசீலிக்கும் என நம்புகிறோம். கூலிக்காக அல்லது இழிவாக இருந்து ஒருவரை தூக்குவது தவறு. அதனை பாஜக விரும்பவில்லை. ஆனால் குரு என்பவர் கடவுளுக்கு சமமானவர், எனவே அவரை தூக்குவது தவறு இல்லை.
ஐந்து முறை முதலமைச்சர் ஆக இருந்த கலைஞர் இதனைத் தடை செய்யவில்லை. ஆனால், ஸ்டாலின் அரசு தடை செய்வதன் அவசியம் என்ன?. பட்டின பிரவேசம் கண்டிப்பாக நடைபெறும் நானே போய் பல்லாக்கை தூக்குவேன். ஆசை, பற்று அனைத்தையும் தாண்டியவர்கள் குருமார்கள். இவர்களை தமிழ்நாடு அரசு மிரட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதனை உடனடியாக முதலமைச்சர் கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி முதலமைச்சர் முன் நின்று இந்த பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை.
சாதனையல்ல சோதனையே..!: திமுகவின் இந்த ஓராண்டு சாதனை என்பதனை விட சோதனை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் காவல் நிலையத்தில் வாரத்திற்கு ஒருமுறை கொலை நடக்கிறது. இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை இயக்குநர் கூறுகிறார். ஆனால், இதனால் என்ன பலன் கிடைத்துள்ளது. எந்த குற்றவாளிகளும் கண்டறியப்படவில்லை.
கிழக்கு கடற்கரை சாலை மத்திய நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளது. இந்த சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைப்பதை விட G square சாலை என பெயரிடுவதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இந்த நிறுவனத்தின் விளம்பரம் தான் சாலையின் இருபுறமும் 10 அடிக்கு ஒன்று உள்ளது. மாநில அரசு பராமரிக்கும் ஒரு நல்ல சாலைக்கு கலைஞர் பெயர் வைக்கட்டும் அதில் மாற்று கருத்து இல்லை. கிழக்கு கடற்கரை சாலைக்கு அவர் பெயர் வைத்து அவரை கலங்கப்படுத்த வேண்டாம்.
பாஜக நிர்வாகியாக இருந்த கே.டி.ராகவன் மீது பாலியல் விவகாரம் தொடர்பாக பாஜக சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை கமிட்டியிடம் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் அளிக்கும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.