சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமிநகர் இளங்கோ தெருவில் 250 வீடுகால் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தனிநபர் தொடர்ந்த வழக்கில் வீடுகளை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வீடுகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் வீட்டை அகற்றும் பணியை மேற்கொண்டனர். கிட்டதட்ட 5 நாள்கள் பணி நடைபெற்று வந்த நிலையில் மே 9ஆம் தேதி கண்ணையன் என்ற முதியவர் தீக்குளித்து இறந்தார். இதனால் வீடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று (மே 14) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அப்பகுதியை ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "1971ஆம் ஆண்டு குடிசை மாற்று பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிதான் கோவிந்தசாமிநகர். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் வழி வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக குடைச்சல் கொடுத்து கொண்டு இருக்கிறார்.
நீதிமன்றம் கொடுத்த உத்தரவை கூட இவர்கள் முறையாக பின்பற்றவில்லை. இங்குள்ள மக்களை ஆளுநரிடம் அழைத்துச் சென்று தலைமை செயலாளர் விளக்கம் கேட்டு அதன் மூலம் வீடுகளை அகற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். நீர்நிலைக்கும் இங்குள்ள வீடுகளுக்கும் சம்பந்தம் இல்லை. தமிழ்நாட்டிற்குள் அகதிகளாக 30 கிலோ மீட்டருக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
இங்குள்ள மக்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் துணையாக நிற்க வேண்டும். முதலமைச்சர் இவர்கள் வீட்டிற்கு வருகை தந்து சாப்பிட்டிருக்கலாம் அல்லவா?. இது கார்பரேட் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்காக நடைபெற கூடிய ஆட்சியாக இருக்கிறது.
இங்கு என்ன நடைபெற்றுள்ளது என்பதை கண்டறிய ஒரு நபர் கொண்ட நீதிபதியை நியமிக்க வேண்டும். இன்று கூட வேலூரில் திமுக கவுன்சிலர் மிரட்டியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார். கருணாநிதி பெயரை சாலைகளுக்கு சூட்டுங்கள், ஆனால் புதிததாக சாலை அமைத்து பெயர் சூட்டுங்கள்" என்றார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு அஞ்சியதா திமுக...? - திருவாரூர் வீதிக்கு கருணாநிதி பெயர் சூட்டும் வைபவம் நிறுத்தம்..!