சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், நடிகை கௌதமி, பாஜக நிர்வாகிகள் சுமதி வெங்கடேசன், காயத்ரி ரகுராம், சங்கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருமாவளவனுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில கலை, கலாசாரப் பிரிவுத் தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம், திருமாவளவனுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டதாகவும், இனி அவரை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திருமாவளவனின் தொகுதிக்குச் சென்றால் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காது என்ற காரணத்துக்காகவே நடிகை குஷ்பு கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
”அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண்களை மதிப்பதை திருமாவளவனின் அரசியல் லாபத்துக்காகத் துளியும் விட்டுத்தரக் கூடாது. திருமாவளவன் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என நடிகை கௌதமி வலியுறுத்தினார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜகவின் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜக தொண்டர்கள் சிலர் திருமாவளவனின் கொடும்பாவியை எரித்தும், சாலை மறியலிலும் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:'அறவழியில் போராடிய பாஜகவினரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது'- எல். முருகன்