சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் பாஜகவினர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து புகார் மனு வழங்கினர். அதில், "தமிழ்நாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதான எதிர்ப்பு பேச்சுக்களை பேசுவதும், அதே மேடையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அமர்ந்து இருப்பதும் அவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்கும் பொழுது எடுத்த உறுதிமொழிக்கு எதிரானது.
ஆகையால் தமிழக ஆளுநர், சனாதனத்திற்கு எதிராக உள்ள அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகிய இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து சட்டரீதியாக நீக்கம் செய்ய வேண்டும்" என அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கரு.நாகராஜன், "வரும் 11 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகம் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது அமைதியாக மேடையில் அமர்ந்து இருந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரி போராட்டம் நடத்த உள்ளோம்.
டெங்கு, மலேரியா போன்றது சனாதானம் அதை ஒழிக்க வேண்டுமென உதயநிதி பேசியுள்ளார். இது இந்து மக்களின் மனதை புன்படுத்தும். சனாதானமும், இந்துவும் வேறு வேறு இல்லை, இரண்டும் ஒன்றுதான். அமைச்சர்களாக பதவியேற்கும் போது விருப்பு வெறுப்பு காட்டமாட்டோம் என உறுதிமொழி எடுத்து உள்ளனர்.
ஆனால் அதற்கு எதிராக மீறி செயல்படுவதால் ஆளுநரிடம் இருவரையும் அமைச்சர் பதிவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என புகார் மனு அளித்துள்ளோம். மேலும் ஆளுநரும் புகார் மனுவை வாங்கி வைத்துக் கொண்டார். தற்போது உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாயை வட இந்திய சாமியார் பரிசாக அறிவித்து உள்ளார். அது உண்மைதான். தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதால், வட இந்திய சாமியாரும் வன்முறையை தூண்டும் அளவிற்கு பேசினார்" என்று கரு.நாகராஜன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!