சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் கௌதமி. பின், புற்றுநோய் ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்ததால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்நிலையில் கடந்த மாதம் கௌதமி தனது சொத்துக்களை அழகப்பன் என்பவர் அபகரித்து விட்டதாக இரண்டு முறை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், ‘தனக்கு புற்றுநோய் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி இருந்தேன். தனது அசையாத சொத்துக்களை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகம் பாதிப்படைந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன்.
அப்போதுதான் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனது சொத்துக்களை விற்க முடிவு செய்தேன். அந்த சொத்துக்கள் அனைத்தும் நான் சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்து கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கியது. அது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனது சொத்துக்களை வாங்கி வைத்திருந்தேன்.
இந்த நிலையில் தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் சொத்துக்களை பராமரிக்க முடியாத காரணத்தினால் தனக்கு தெரிந்த அழகப்பன் என்பவரிடம் தனது சொத்துக்களை பராமரிக்க ஒப்படைத்து இருந்தேன். மேலும் பல சொத்துக்களை விற்பனை செய்து கொடுக்கவும் அழகப்பனை பவர் ஏஜென்ட் ஆக வைத்திருந்தேன்.
தமிழகத்தில் இருக்கும் தனது பல்வேறு சொத்துக்களையும் அழகப்பன் மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டேன். தனது மகள் படிப்புக்காகவும் பல சொத்துக்களை அடுத்தடுத்து விற்பனை செய்வதன் மூலம் அழகப்பன் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். இந்த நிலையில் தனது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அழகப்பன் தன்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து பெற்று தன்னை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக புகாரில் தெரிவித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பாஜக பிரமுகர் அழகப்பன் அவரது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி மற்றும் பாஸ்கரன், சதீஷ்குமார் ஆகிய ஆறு பேர் மீதும் மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று (அக்.23) காலை கெளதமி பாஜகவில் தனக்கு ஆதரவு இல்லை என்று கூறி பாஜகவில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Gaganyaan TV D1: ககன்யான் விண்கலம் எடுத்த வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ!