தமிழ்நாடு பாஜகவின் மாநில, மாவட்ட மற்றும் உள்கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையிலுள்ள அய்யாவு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், தேசிய பொதுச்செயலாளருமான முரளிதர ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகளுக்கு திருவள்ளுவர் காவி உடை அணிந்து திருநீறு பூசியிருப்பது போன்ற அட்டைகளை கட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு பாஜக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து திருநீறு பூசி இந்து மதத்தை சார்ந்தவர் போல் சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட சர்ச்சை ஓய்ந்த சூழலில், தற்போது தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அதேபோல் அட்டையை வழங்கியிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.