சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (ஆகஸ்ட் 30) மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் மறைந்த மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் கே.சண்முகம் அவர்களுக்கான இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில், சென்னையை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதில் சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் 146வது வார்டின் மாமன்ற உறுப்பினருமான ஆலப்பாக்கம் கே.சண்முகம் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட்7ல் உயிரிழந்தார்.அதைத்தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கிய முதலில், தீண்டாமை உறுதிமொழியை உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மேயர் ஆர்.பிரியா மறைந்த மாமன்ற உறுப்பினர் அவருக்கு இரங்கலை தெரிவித்தார். மேலும், திமுக, அதிமுக, விசிக, இந்திய முஸ்லீம் லீக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் ஆலப்பாக்கம் கே.சண்முகத்திற்கு இரங்கல் தெரிவித்து மாமன்ற கூட்டத்தில் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் பேசுகையில், ‘இனிமேல் இரங்கல் கூட்டத்தில் எனக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டாம் எனவும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவுப் பேரணியில் மாமன்ற உறுப்பினர் இறந்தது அவர் கருணாநிதி மேல் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது என்றார். திரும்பவும், இறைவன் எனக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டாம் என இறைவனை கேட்டுக் கொள்கிறேன் என்றார். மேலும், அவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
தொடர்ந்து பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் பேசுகையில், "முன்னாள் நடந்த இரங்கல் கூட்டத்தில் எனக்கு பேச வாய்பளிக்கவில்லை என பலமுறை நான் கேள்வி கேட்டு இருக்கிறேன் அதற்கும் என் மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.மேலும், மேயர் ஆர்.பிரியா மறைந்த மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் கே.சண்முகம் அவருக்கு இரங்கலை தெரிவித்துக்கொண்டார். அதைத்தொடர்ந்து, இரங்கல் தீர்மாணம் நிறைவேற்றி, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மாமன்ற கூட்டம் நாளை (ஆகஸ்ட் 31) ஒத்திவைக்கப்படுகிறது என அறிவித்தார்.
இதையும் படிங்க:"அலுவலர் தேர்வுகளில் இந்தி கட்டாயமில்லை" - NTA அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் வரவேற்பு