சென்னை: முதல்வருக்கு பெருமையோ பெருமை, தமிழக விவசாயிக்கோ வெறுமை, வறுமை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய கிராமசபை கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய நாட்டிலேயே தமிழ்நாடு தான் முதன்முதலாக விவசாயத்திற்கு தனி பட்ஜெட்டை கொடுத்தது என்று கூறியுள்ளார். இது முற்றிலும் தவறான தகவல், 2011- 12 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் இந்தியாவின் முதல் விவசாய பட்ஜெட் போடப்பட்டது.
இரண்டாவதாக ஆந்திர பிரதேசத்தில் 2013- 14 ஆம் ஆண்டு விவசாயத்திற்கான தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டது. விவசாயத்துக்கான பிரத்யேக பட்ஜெட்டைப் போன்ற திட்டங்களை தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் பிகார் போன்ற மாநிலங்களும் கொண்டிருந்தன. எனவே தமிழகம் விவசாயத்திற்கான தனி பட்ஜெட் தயாரித்த மூன்றாவது மாநிலம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட்டை உருவாக்கியதற்கு பாஜக சார்பில் நான் பாராட்டுகிறேன். தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே முதல் முதலாக விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது என்பதை மறுக்கிறேன். பட்ஜெட் முதலில் போடுகிறோமா? மூன்றாவதாகப் போடுகிறோமா? என்பது முக்கியம் இல்லை. ஆனால், எழை விவசாயிகளுக்கு என்ன செய்தோம் என்பதே ரொம்ப முக்கியம்.
தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மைக்கென பிரத்யேகமான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகளின் வாழ்க்கையில் உடனடியாக மாற்றம் நிகழ்ந்து விடாது என்றாலும், இது ஒரு நல்ல தொடக்கம் என பாஜக வரவேற்கிறது. ஆனால் தமிழக மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து இருக்கிறார்கள்.
2021-22 இல் 125 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை அடைவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன? மத்திய அரசுடன் இணைந்து விவசாயிகளுக்கு என்ன சலுகைகள், என்ன நலத்திட்டங்கள் வழங்குகிறீர்கள்? அவர்கள் அதைப் பெற்று எப்படிப் பயனடைகிறார்கள்? என்பதிலே தான் பெருமை இருக்கிறது.
மத்திய அரசின் விவசாயச் சட்டத்தை மறுத்துத் தீர்மானம் போட்டதும் உங்களுக்குப் பெருமையோ...பெருமை ஆனால் பொறுமையாக நல்லது நடக்கும் என்று காத்திருக்கும் என் விவசாய சொந்தங்கள் வாழ்விலோ வெறுமை வறுமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.