சென்னை பெரம்பூர் கொடுங்கையூர் காவேரி சாலையைச் சேரந்தவர் வெங்கடேஷ் சங்சானி (42). இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர். இவருக்கு சுதா என்ற மனைவியும், திரிவிஷா (6) என்ற மகளும் உள்ளனர். எம்பிஏ பட்டதாரியான வெங்கடேஷ் சங்சானி, தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பயிற்சி மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
இதனிடையே தலைமை செயலக காலனி பராக்கா சாலையிலுள்ள சென்னை கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான கடைகளில் ஒன்றை பராமரித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவரிடம் மாத வாடகை ரூ.50 ஆயிரம் பேசி, வெங்கடேஷ் சங்சானி வாடகைக்கு எடுத்தார்.
பின்னர் அங்கு அவர் தாஜ் என்ற பெயரில், கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கரோனா தொற்று காரணமாகக் கடையைத் திறக்க முடியாததால், வெங்கடேஷ் சங்சானி வாடகைத் தொகையைத் செலுத்த முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குப்பன் கலால் பிரிவில் பணிபுரியும் காவலர் செந்தில் என்பவரை வைத்து வெங்கடேஷ் சங்சானியை மிரட்டியுள்ளார்.
கடந்த 9ஆம் தேதி, அந்த காவலர் ஒரு கும்பலுடன் சென்று வெங்கடேஷ் சங்சானியைத் தகாத வாரத்தையால் திட்டியும் கடையைக் காலி செய்து தருமாறும் மிரட்டியதுடன் கடையில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வீசி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன வெங்கடேஷ் சங்சானி தனது மனைவி, குழந்தையைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டில் தனியாக இருந்துவருகிறார்.
மே 22ஆம் தேதி காலை இவரது வீட்டிற்குச் சென்ற ஒரு கும்பல், தங்களை காவல் துறையினர் என்று அறிமுகம் செய்து, விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி வெங்கடேஷ் சங்சானியை காரில் கடத்தி சென்றனர். அவரை பெரம்பூரிலுள்ள ஒரு அலுவலகத்திற்கு அழைத்து சென்று, கடையைக் காலி செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததுடன், வெங்கடேஷ் சங்சானியை சரமாரி தாக்கி, பின்னர் மீண்டும் காரில் வேறொரு இடத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு குப்பன், காவலர் செந்தில் அடங்கிய கும்பல் ஒன்று வெங்கடேஷ் சங்சானியை கத்தி முனையில் மிரட்டி, வெறும் தாளில் கையெழுத்து வாங்கி கொண்டு, அவரை தண்டையார்பேட்டை அருகே காரில் இருந்து இறக்கி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து வெங்கடேஷ் சங்சானி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கொடுங்கையூர் காவல் துறையினர் கடத்தலில் ஈடுபட்ட காவலர் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் உட்பட 7 பிரிவில் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்