சென்னை: தமிழ்நாடு அரசு நிர்வாக செயல்பாடுகளை டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேம்படுத்தி வருகிறது. அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையில் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் விதத்தில் டிஜிட்டல் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கான சேவைகளை உறுதிப்படுத்திடவும், வெளிப்படைத்தன்மையோடு தகவல் பரிமாற்றம் செய்து அரசின் நிர்வாக செயல்பாடுகளின் விவரங்கள் மற்றும் சேவைகளை அடைந்திட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
QR code மென்பொருள் செயலி: 2022-23ம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணி மற்றும் சேவைகளை நிகர்நிலையில் கண்காணிக்கவும், பணிகள் குறித்த விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ளவும், பணி மற்றும் சேவை குறித்த மக்களின் கருத்துகளை விரைவு துலங்கல் குறியீடு (க்யூஆர் கோடு) போன்ற செயலிகள் மூலம், தெரிவித்திடவும் சீர்மிகு ஆளுமை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வலைசெயலி மூலம் நகரில் உள்ள கட்டமைப்புகளை உள்ளடக்கிய வரைபடம் தயாரிக்கப்பட்டு தகவல் தொழில்நுட்ப முறையில் விரைவு துலங்கல் குறியீடு (க்யூஆர் கோடு) ஒவ்வொரு அரசு சார் கட்டமைப்புகள், தனியார் வரி விதிப்பு கட்டமைப்பிற்கும் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான “விரைவு துலங்கல் குறியீடு - QR Code” மென்பொருள் செயலியைத் தொடங்கி வைத்தார். இந்த விரைவு துலங்கல் குறியீடு (க்யூஆர் குறியீடு) ஒவ்வொரு கட்டமைப்புகளின் முகப்புகளிலும் பயன்படுத்தத்தக்க வகையில் உள்ளாட்சி ஊழியர்களால் ஒட்டப்படும்.
இதன் மூலம் பொதுமக்கள் உள்ளாட்சி சேவைகளின் மீதான நிறைகுறைகளைத் தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி ஊழியர்கள், தங்களது பணியினை மேம்படுத்தி, மக்களுக்குத் திருப்திகரமான சேவைகளை செய்திட வழிவகுக்கும்.
மேலும், சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரி நிலுவைகளைப் பற்றிய அறிவிப்பை பெற்று செயலி மூலமே தொகையைச் செலுத்தலாம். பிறப்பு, இறப்பையும், வீட்டிலிருந்தவாறே விரைவு துலங்கல் குறியீட்டை (க்யூஆர் குறியீடு) ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகார் மற்றும் கோரிக்கைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த விவரங்கள், அவற்றின் நிலை ஆகியவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். அத்துடன், உள்ளாட்சி கட்டமைப்புகளான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், எரியூட்டு மயானம், மார்க்கெட், விளையாட்டு மைதானம், நகர்நல மையம், கழிப்பறைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள விரைவு துலங்கல் குறியீடு (க்யூஆர் குறியீடு) மூலம் மக்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தால், உள்ளாட்சிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அக்கட்டமைப்புகளை மேலும் நல்ல முறையில் மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இயற்கை உரம் விற்பனை தொடக்கம்: 2023-24ம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையில், நகர்ப்புறங்களில் சேகரிக்கப்படும் மட்கும் குப்பைகள் நுண்ணுரக் கூடங்களில் இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. தரமான இயற்கை உரத்தை நுகர்வோருக்கு அளிக்கும் வகையில், உரத்தின் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு பகுப்பாய்வு செய்யப்பட்ட இயற்கை உரத்தினை “செழிப்பு” என்ற பெயரில் தரக்குறியீடு நிர்ணயம் செய்து அனைத்து நகரங்களிலும் விற்பனை செய்து வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஈரக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்திற்கு “செழிப்பு” எனப் பெயரிட்டு விற்பனையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சுமார் 15,000 டன் குப்பை நாளொன்றுக்கு சேகரம் ஆகிறது. இதில் சுமார் 55 சதவீதம் மட்கும் குப்பையாகும். மட்கும் குப்பையிலிருந்து சுமார் 15 சதவீதம் உரமாக பெறப்படுகிறது. மாநகராட்சிகளில் 629 இடங்களில், நகராட்சிகளில் 334 இடங்களில் மற்றும் பேரூராட்சிகளில் 489 இடங்களிலும் உள்ள நுண் உர மையங்கள் மற்றும் காற்றாடல் மையங்களில் மட்கும் குப்பை அறிவியல் முறையில் செயலாக்கம் செய்யப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.
இவற்றில் நாள் ஒன்றுக்கு சுமார் 870 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. இந்த உரத்தைப் பயன்படுத்தும் போது மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீரை தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மை மேம்படுத்தப்படுவதோடு, மண்ணில் இடப்படும் ரசாயன உரத்திலிருந்து சத்துக்களை விடுவிக்கும் தன்மை மற்றும் அதனை பயிர் ஏற்றுக்கொள்ளும் வடிவில் சத்துக்களை மாற்றும் தன்மையும் ஏற்படும்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.