தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,728 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆதார் உதவியுடன் ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்களின் விபரங்கள் அனைத்தும் ஆதார் பதிவுடன் இணையத்தில் பதிவேற்றப்பட்டது. அதனடிப்படையில் இன்று முதல் தமிழகத்தில் இந்தப் புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது. ஆசிரியர் காலை பள்ளிக்கு வந்தவுடன் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கருவியில் தங்களின் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். அந்த தகவல் மத்திய அரசின் தேசிய தகவல் மேலாண்மை நிறுவனத்தின் மூலம் பதிவேற்றம் செய்யப்படும்.
அதனை மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் உள்ளிட்டவர்கள் பார்வையிட முடியும். இதன் மூலம் ஆசிரியர்களின் வருகை முழுவதும் உறுதி செய்யப்படும். இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி கூறுகையில், சென்னையில் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 302 பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் காலை மற்றும் மாலை இருவேளையும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் கருவியில் தங்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும்.இதன்மூலம் ஆசிரியர்களின் வருகை கண்காணிக்கப்படும். மேலும் பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.