சென்னை: தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை மாநில அரசே நியமிப்பது தொடர்பான சட்ட மசோதா, கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று (ஏப்ரல் 20) பேரவையில் தாக்கல் செய்தார்.
அந்த மசோதாவில், “குஜராத், தெலங்கானா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளன. அதன்படி, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 12 மாநில பல்கலைக்கழகங்களிலும் மாநில அரசே துணைவேந்தரை நியமிக்கும் வகையில் சட்டமசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட முன்வடிவு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், 1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவில், துணைவேந்தரை நியமிப்பதற்கான வேந்தர் என்பதற்குப் பதிலாக அரசு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், துணைவேந்தரை நீக்குவதற்கான அதிகாரம் என்பது, உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது அரசின் தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான அலுவலர் தலைமையில் விசாரணை அமைத்தே நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சட்டப்பேரவையில் இந்த மசோதாவை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தாக்கல் செய்தபோது, தொடக்க நிலையிலேயே அதிமுக எதிர்ப்பதாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதிவு செய்தார்.
இதையும் படிங்க: வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!