ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.3 கோடியே 92 லட்சம் மதிப்பிலான கன்று வளர்ப்பு, பயிர்கடன் மற்றும் தனிநபர் கடனுதவிகளை 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து நம்பியூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “தொலைதூரம் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் நியாயவிலைக் கடைகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த மாதம் இறுதி வரை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அங்கன்வாடிகளில் சேர்ப்பதற்காக குழந்தைகளை பாதுகாப்போடு அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது. கூடுதலான மாணவர் சேர்க்கைகைக்கு தேவையான வகுப்பறைகளும் ஆசிரியர்களும் தேவையான அளவு உள்ளனர்.
புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாடு அரசின் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடரும். ஆங்கில வழியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.