பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியைச் சேர்ந்தவர் அண்ணாமலை(21). பட்டப்படிப்பு முடித்துள்ள இவரும் குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியைச் சேர்ந்த அபிநயா(20) என்ற பெண்ணும் காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் ஷோரூமில் கடந்த சில வாரங்களாக வேலை செய்து வந்த நிலையில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அபிநயா அந்த வேலையிலிருந்து நின்று விட்டதால், இதுவரை வேலை செய்ததற்கான சம்பளத்தை வாங்கி வருவதாக வீட்டில் கூறிவிட்டு அண்ணாமலையை பார்க்கச் சென்றுள்ளார். பின்பு, குன்றத்தூரில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த அண்ணாமலை, அபிநயாவை ஏற்றிக்கொண்டு வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அபிநயாவுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட பயிற்சி கொடுப்பதாகக் கூறி, அபிநயாவை இருசக்கர வாகனத்தை ஓட்ட வைத்து விட்டு பின்னால் அண்ணாமலை அமர்ந்தபடி சென்றுள்ளார். திடீரென நிலைதடுமாறி சாலையின் தடுப்புச் சுவரில் உள்ள கம்பியின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அபிநயா முகம், கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரழந்தார். அண்ணாமலைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புலனாய்வு பிரிவு காவல் துறையினர், காயங்களுடன் இருந்த இளைஞரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இறந்து இளம் பெண்ணின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.