சென்னை: பத்திரிகையாளர் மன்றத்தில் பீமா கோரேகான் அரசியல் சிறைப்பட்டோர் விடுதலை குழு சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டார்
மேலும், இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது முதலில் பேசிய திருமாவளவன், "பீமா- கோரேகான் வழக்கு என்பது சர்வ தேசிய அளவில் பேசக் கூடிய வழக்கு. பீமா - கோரேகான் என்ற வழக்கில் 16 நபர்கள் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் இறந்துள்ளார். இரண்டு நபர்களுக்கு பிணை கிடைத்துள்ளது. மீதம் உள்ளவர்கள் சிறைச்சாலையில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்.
மத்திய அரசு இந்த வழக்கைத் திரும்பப் பெற்று, எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறோம்.
மேலும் இந்த கோரிக்கையை முன்வைத்த இடதுசாரி சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஜூன் மூன்றாம் வாரத்தில் நடைபெற உள்ளது. தேதி மற்றும் இடம் இறுதி செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்படும்.
பிரதமரை கொல்லத் திட்டமிட்டதாக, இவர்களைக் கைது செய்தார்கள். ஆனால் இதுவரை கைது செய்த பிறகு எந்த ஒரு குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. பிணையில் வராத வண்ணம் இந்த வழக்கை அரசு நடத்தி வருகிறது.
நேரம் கிடைக்கும் பொழுது நாடாளுமன்றத்தில் இது குறித்து பேச இருக்கிறேன். மேலும் இது குறித்து மத்திய அமைச்சரிடம் ஏற்கெனவே பேசியிருக்கிறேன். தற்போது இந்த அமைப்புசாரா குழுவுடன் அரசியல் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவை இணைந்து செயல்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், "பீமா- கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 16 பேரும் எந்த கட்சியையும் சாராமல் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் பிரச்னைக்காக போரடியவர்கள். மத்திய அரசு இவர்களை ஒடுக்க வேண்டும் என்று நினைக்கிறது. அவர்களை சிறையில் இருந்து மீட்டு எடுக்க வேண்டும்.
ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கும் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி துணை நிற்கும்" எனத் தெரிவித்தார்.
இறுதியாக பேசிய திருமாவளவன் சமுக நீதியை வலியுறுத்தி செஞ்சட்டை பேரணி வரும் 29ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பீமா கோரேகான் வழக்கில் 82 வயது சமூக ஆர்வலர் கைது!