ஜே கே இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஐ-ஆர்-8. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, பவித்ரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், "தயாரிப்பாளர் சங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்னைக்கு பாரதிராஜா போன்ற அனுபவமிக்கவர்களின் தலைமையில் நிர்வாகம் நடந்தால் சிறப்பாக இருக்கும்" என்றார்
ஆர்கே செல்வமணி பேசுகையில், "தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயமும் தமிழ் திரைப்படத்துறையும் ஒரே நிலையில் உள்ளது. இந்த இருவரின் முதலீட்டிற்கும் விலை கிடையாது. விவசாயிக்கு மானியம் கொடுக்க வேண்டாம் விளைபொருளுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்தால் போதும். திரைப்படத்துறையை இணையத்தின் உதவியோடு பெரும் முதலாளிகள் இயக்குகின்றனர். எங்களை சாகடித்து 4000 கோடி பணம் ஈட்டுகின்றனர். இதற்கு இந்திய அரசாங்கம் உடந்தையாக உள்ளது. இந்த நிலை மாறினால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சிறந்த திரைப்படங்களை நாங்கள் கொடுப்போம்.
அதேபோன்று விவசாயிகளின் முதலீட்டிற்கு தகுந்த விலையை அளித்தால் போதுமானது. ரூபாய் 12,000 கோடி கடன் பெற்றவர்கள் எல்லாம் பிரதமர் அருகில் நிற்கின்றனர். ஆனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இப்பொழுது உள்ள தலைமை சரியான தலைமைதான். ஆனாலும் சரியான தலைமையோடும் சரியான வழிகாட்டுதலோடும் நிர்வாகம் நடந்திருந்தால் இந்த திரைப்படத்துறை ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்கும். ஆனால், அதை தவற விட்டுவிட்டார்கள்" என்றார்.