மத்தியில் ஆளும் பாஜக அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் முற்றுகையிட்டு கடந்த 26ஆம் தேதிமுதல் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சியிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் இன்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டதை அடுத்து காங்கிரஸ், திமுக, அதன் கூட்டணிக் கட்சியினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டில் முழு கடை அடைப்புப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநிலத்தின் எதிர்க்கட்சியான திமுக கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன.
முழு அடைப்பின்போது எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதில், சென்னையில் மட்டும் சுமார் 7,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். முழு அடைப்புப் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: 'முழு அடைப்பினை அனைவரும் ஆதரிப்போம்!' - உ.பி.களுக்கு ஸ்டாலின் மடல்!