சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்துள்ளது, கடந்த மூன்று நாட்களாக அதிமுக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் மாறி மாறி ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், “இது தொண்டர்களுக்கான இயக்கம். பொதுக்குழுவில் பல்வேறு திருத்தங்கள் மாற்றங்கள் கொண்டு வர முடியும். ஆனால், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே. அது அவருக்கே உரித்தானது. 30 ஆண்டுகள் பொதுச்செயலாளர் பதவி வகித்தார், ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் பொதுச்செயலாளர் பதவி அவருக்கு மட்டுமே உரியது என்று நானும் எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்தோம்.
TTV தினகரனின் செயல்பாடுகளால் ஆட்சி பறி போகக்கூடிய சூழல் உருவானது. ஆட்சி பறி போகக்கூடாது என நானும் எடப்பாடி பழனிசாமியும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஒன்றாக இணைந்தோம்.
துணை முதலமைச்சர் பதவியை ஏற்றது இதனால்தான்:ஆறு ஆண்டுகாலமாக நானும் எடப்பாடி பழனிசாமியும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஒருங்கிணைப்பாளராகவும் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறோம். துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று எனக்கு தெரியும். ஆனால், இருந்தாலும் கட்சியின் நன்மைக்காக பிரதமர் கேட்டுக்கொண்டதால், நான் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஏன் திடீரென இந்த ஒற்றைத்தலைமை குழப்பம் வந்தது என்று தெரியவில்லை. மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் கருத்து சொல்வதற்காகவே மாதவரம் மூர்த்தி என்பவரை எடப்பாடி பழனிசாமி தான் அழைத்து வந்தார். அவர் தான் முதன்முதலில் ஒற்றைத் தலைமை என ஆரம்பித்தார்.
மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றைத்தலைமை பற்றி பேட்டி கொடுத்ததால் தான் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. ஒற்றைத்தலைமை பிரச்னையை பேட்டி கொடுத்து பெரிதாக்கியவர்களை நானும் எடப்பாடி பழனிசாமியும் அமர்ந்து பேசி கண்டிக்க வேண்டும்” எனப் பேசினார்.
மேலும் பேட்டி அளித்த ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள்” எனப் பதிலளித்தார்.
மேலும் அவர், ‘நான் தொண்டர்களை காப்பாற்றவே இந்த இயக்கத்தில் இருக்கிறேன். நாம் ஒற்றுமையாகப் பணியாற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும். இதுவே நமது தலையாய கடமை. அதைவிடுத்து இது போன்ற பிரச்னைகளில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டாம்’ என்றார்.
அப்போது, அதிமுகவிற்கு இரட்டைத் தலைமை சரியானதா இல்லையா என்ற கேள்விக்கு, “இன்றைய கால கட்டத்தில் இரட்டைத் தலைமை நன்றாக செல்கிறது. ஒற்றைத்தலைமை பொதுச்செயலாளர் பதவி யாருக்காவது கொடுக்க நினைத்தால் அது ஜெயலலிதாவுக்கு செய்கிற மிகப்பெரிய துரோகம். அம்மா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, அவர் மட்டுமே அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர். அவருக்கு மட்டுமே அந்தப் பதவி உரித்தானது.
அதிமுகவில் இருந்து என்னை ஓரங்கட்டமுடியாது: அதிமுகவில் அனைத்து உட்கட்சி தேர்தலையும் நடத்தி தலைமை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முறைப்படி தேர்ந்தெடுத்தபிறகு இப்படி ஒரு குழப்பம் தேவையா? நானும் எடப்பாடி பழனிசாமியும் எந்தவித பிரச்னையும் இன்றி ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட பேச்சுவார்த்தை நடக்கிறது.
14 மூத்த அதிமுக உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியில் எந்த பிரச்னை வந்தாலும் அவர்கள் இறுதியாக என்ன சொல்கிறீர்களோ அதைத் தான் கேட்போம். நான் இதுவரை எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்ததற்கு காரணம் தொண்டர்கள் தான்.
தற்காலிக ஏற்பாடாக கட்சியை வழி நடத்துவதற்கு மட்டுமே சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். எனக்கு எதிராக அதிமுகவில் ஒரு குழு செயல்படுகிறது என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. அதிமுகவிலிருந்து யாராலும் என்னை ஓரங்கட்ட முடியாது. தொண்டர்களுக்காக நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
இந்த ஒற்றைத்தலைமை பிரச்னை எனக்கு மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது. 14 பேர் கொண்ட உயர்மட்டக்குழு என்ன சொல்கிறதோ அதற்கு தலை வணங்குவேன். 23ஆம் தேதிக்குள் சுமுகமான முடிவு எட்டப்படும் என நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்” என்று பேசினார்.
இதையும் படிங்க: 'பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன்' - ஓ.பன்னீர்செல்வம்