அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான 280 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டை ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் அருள் அறம், செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழக விசாரணை அலுவலர் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசனுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் ,”அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவின் சில சாதனைகளை கூறுகிறோம்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா பதவி ஏற்ற பின்னர், பணம் கொடுத்தால் மதிப்பெண் வழங்கப்படும் என்ற கலாச்சாரத்தை ஒழித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் தரகர்களின் தலையீட்டை நிறுத்தி உள்ளார்.
இவர் பதவி ஏற்பதற்கு முன்னர் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அலுவலகத்தில் புரோக்கர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. தற்போது அந்த ஊழலை முற்றிலும் ஒழித்துள்ளார். துறைத்தலைவர்கள், ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர்கள் உள்ளிட்ட நிர்வாக பதவிகள் தற்போது விற்பனை செய்யப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள், மண்டலக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்து நியமித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளார். அரசியல்வாதிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறையிலோ, விருந்தினர் தங்கும் விடுதியிலோ ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதிக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அனுமதியை பெற்றுள்ளதுடன், தேசிய தர அங்கீகாரத்தையும் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, பட்டம் வழங்கும் விழா ஆகியவற்றின்போது மேற்கொள்ளப்படும் செலவினை குறைத்துள்ளார். பட்டமளிப்பு விழாவில் தகுதியானவர்களுக்கு மட்டுமே தங்கப்பதக்கங்களை வழங்கியுள்ளார். ஆராய்ச்சி படிப்பிற்கான விதிமுறைகளை உயர்த்தி, மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்தி உள்ளார்.
சர்வதேச தரத்திற்கு அண்ணா பல்கலைக்கழகத்தினை உயர்த்தியுள்ளார். சூரப்பாவுக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் யாரும் இல்லை, உண்மையில் யார் ஊழல் செய்தது என்பது குறித்து உரிய முறையில் விசாரிக்க வேண்டும் ”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.