சென்னை: ராயப்பேட்டையில் மெட்ராஸ் கேர் சென்டர் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ராஜி என்பவர் நேற்று சந்தேகமான முறையில் உயிரிழந்தார். ராஜியின் மனைவி கலா தனது கணவரின் முகத்தில் அடித்த காயம் இருப்பதாகவும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணாசாலை போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்களை அழைத்து விசாரணை நடத்திய போது, ராஜியை மாப் கட்டையால் தாக்கி சுடு தண்ணீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதால் இறந்ததுள்ளார் எனத் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி ஊழியர்களான யுவராஜ், கேசவன், செல்வமணி, சரவணன், சதீஷ், மோகன், பார்த்தசாரதி ஆகிய 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் உரிமையாளர்களான கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மெட்ராஸ் கேர் சென்டர் உரிமையாளரான கார்த்திகேயன் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதும், முன்னாள் மாநகராட்சி ஊழியர் என்பதும் தெரியவந்தது. கார்த்திகேயன் அவரது மனைவி லோகேஸ்வரி பெயரில் மாநில மனநல அமைப்பிடம் அனுமதி பெறாமல் மெட்ராஸ் கேர் சென்டர் என்ற பெயரில் போதைமறுவாழ்வு மையத்தை நடத்தி வருவதும் தெரியவந்தது. சுமார் 25க்கும் மேற்பட்ட நபர்கள் இம்மையத்தில் சிகிச்சை பெற்று வருவதும், ஆரம்பக்கட்ட சிகிச்சை கட்டணமாக 20 ஆயிரம் ரூபாய் முதல் பெறப்பட்டு சிகிச்சை அளித்து வருவதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவரின் குடும்பத்தினரிடம் இங்கு அடித்து கொடுமைப்படுத்துவதாக ராஜி தெரிவித்துள்ளார், இதனால் அந்த குடும்பத்தினர் அந்த நபரை வேறு மையத்திற்கு சேர்த்ததால் உரிமையாளர் கார்த்திகேயன், இதற்கு ராஜி தான் காரணம் என்பதால் அவர் மீது கடும் கோபத்தில் இருந்து வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
கோபத்தில் இருந்த உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி நேற்று ராஜி சிகிச்சை பெற்று வந்த போது, வீடியோ காலில் ஊழியர்களிடம் பேசி உடல் முழுவதும் தாக்கி ராஜியை கொலை செய்ய சொன்னதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் ஊழியர்கள் ராஜியை அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 20 பேரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.
இதையும் படிங்க: வன்னியர் இடஒதுக்கீட்டின் நிலை என்ன?- முதலமைச்சர் ஸ்டாலின் பதில்