சென்னை: 'மிக்ஜாம்' (Michaung) என்ற வார்த்தையை சென்னை மக்கள் அவ்வளவு எளிதாக மறக்கமாட்டார்கள். ஏனெனில், அப்படிப்பட்ட மறக்க முடியாத ஒரு வடுவை கொடுத்து சென்றது, இந்த மிக்ஜாம். மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தும், புயலினுடைய பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் இன்னும் மீளவில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு சென்னையைப் புரட்டிப் போட்டிருக்கிறது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை டிச.4, 2023 அன்று புரட்டிப்போட்ட இந்த மிக்ஜாம் புயல் டிச.5ஆம் தேதி மாலை அன்று ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே கரையைக் கடந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழையின் பாதிப்பு மற்றும் வெள்ளம் வடிந்தாலும் கூட, சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்கள் வீட்டிலும், நிவாரண முகாம்களிலும் முடங்கியே உள்ளனர்.
சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இவர்களுக்கு உதவும் வகையிலும், பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்தவர்களை உதவிக்கரம் நீட்டி பத்திரமாக தங்களுடைய படகுகள் மூலம் காப்பற்றியவர்கள் தான் நம்முடைய மீனவர்கள்.
ஆனால் தற்போது, மீனவர்களாகிய தங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை என கண்ணீர் மல்க வருந்துகின்றனர். வடசென்னை எண்ணூர் பகுதிக்குட்பட்ட எண்ணூர் குப்பம், தாழங்குப்பம் ஆகிய பகுதி மக்களுக்கு, வாழ்வாதாரம் என்பது மீன்பிடி தொழில் மட்டுமே. அதிலும், இந்த எண்ணூர் பகுதி என்பது கொசஸ்தலை (கொற்றலை) ஆறும், கடற்கரையும் இணையும் முகத்துவாரம் என்பதால், மீன்களுடைய வரத்து அதிகமாக இருக்கும்.
இப்படி இந்த கடல் வளங்களை மட்டுமே நம்பி தங்களின் வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் மீனவர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகி நிற்பதுதான் வேதனை அளிக்கிறது. எண்ணூர் பகுதி என்பது பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள் அதிகமான பகுதியாகும்.
இதில், கொசஸ்தலை ஆறின் அருகில் இருக்கும் எண்ணெய் நிறுவனத்திலிருந்து அவ்வப்போது கச்சா எண்ணெய் கழிவுகள் திறந்துவிடப்படுவது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு, திறந்துவிடப்படும் எண்ணெய் கழிவுகளால், பல உடல் உபாதைகள் தங்களுக்கு ஏற்படுவதாக எண்ணூர் குப்பம் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடலில் கசியும் எண்ணெய் கழிவுகளால் உயிரிழக்கும் கடல்வாழ் உயிர்கள்: குறிப்பாக ஆலையில் இருந்து வெளிவரும் எண்ணெய் கழிவுகள் மட்டுமல்லாமல், சாம்பல் மற்றும் சூடான நீர் அதிகளவு ஆற்றில் கலப்பதால் மீன்கள் உள்ளிட்ட பல கடல் உயிரினங்கள் அவ்வபோது இறந்து கரை ஒதுங்குவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மீனவர் வெங்கடேசன் கூறுகையில், "எண்ணெய் நிறுவனத்தில் இருந்து கழிவுகள் திறந்துவிடப்படுவது இங்கு வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடமும், இங்கு ஆய்வுக்காக வரும் அரசியல் கட்சியினரிடமும் கூறியும் எந்தவித பயனுமில்லை.
இந்த புயலை பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் இதுவரை உள்ளே தேக்கி வைத்திருந்த ஒட்டுமொத்த கழிவுகளையும் வெளியேற்றியதன் விளைவாக, அதிகளவிற்கு எண்ணெய் கழிவுகள் கடற்கரையில் தேக்கமடைந்துள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமல்ல, மீனவர்களாகிய நாங்களும் பாதிக்கப்படுகிறோம்" என வேதனையுடன் தெரிவித்தார்.
சுகாதார சீர்கேடு - மக்கள் அவதி: அது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், "இந்த எண்ணெய் கழிவினால் உடலில் அரிப்பு மற்றும் சுவாச பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், தொடர்ந்து இந்த நஞ்சு கலந்துள்ள காற்றை சுவாசிப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றனர். அரசு எங்களுக்கு மழையால் பாதிப்படைந்ததற்கு நிவாரணம் வழங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் அவதியுறும் மக்கள்: ஆனால், எங்களுடைய வாழ்வாதரம் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால், இங்குள்ள எண்ணெய் நிறுவனங்களை மூட வேண்டும். இது கேட்பதற்கு சுயநலமான மனப்போக்கு என அரசு அதிகாரிகள் நினைத்தாலும் அதில், எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் கேட்பது எங்களுக்காக மட்டுமல்ல, நாங்கள் நம்பியுள்ள கடலுக்கும் சேர்த்து தான். கடலில் வாழும் கடல்சார் உயிரினங்களுக்கும் சேர்த்துதான்" என கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கின்றனர், எண்ணூர் பகுதி மீனவ மக்கள்.
மேலும், சென்னை மணலி, எண்ணூர் பகுதிகளில் மீக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோவின் அடிப்படையில், தாமாக முன் வந்து டிசம்பர் 7ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு - ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் அறிவிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!